பொங்கல் – உழைப்பின் கொண்டாட்டம்!

சாதி சமயம் தாண்டிய தைப்பொங்கல்

ஆடி 18-இன் முளைப்பாரியும், தைத்திங்கள் பொங்கலும் தமிழர்களின் முக்கியமான அடையாளம். இரண்டும் ஒன்றோடுன்று இணைந்த திருவிழாவும் கூட. முளைப்பாரியில், அந்த ஆண்டு எடுத்து வைத்த விதையை, முளைப்போட்டு ஊர் முன் வைத்து, அதில் எவருடையது சிறந்து விளைந்திருக்கிறதோ அதைத் தான் அந்த ஆண்டு அனைவரது கழனியிலும் பயிரிடுவார்கள். அதன் விளைச்சலை உழைப்பின் பலனோடு உணரும் விழா தான் தைப்பொங்கல். 

நெல்லுக்கு இணையாக கரும்பும் மஞ்சளும்

சங்க காலம் தொட்டே மிக முக்கிய பயிராக கரும்பு இருக்கிறது, அதனால் தான் வாழை, தென்னைக்கு சமமாக கரும்பு வீட்டு வாயிலில் கட்டப்பட்டு, விளைந்த புதிய பச்சரிசியின் ருசி பார்க்க அக்கார அடிசல் வைக்கப்படுகிறது. அக்காரம்- சர்க்கரை, அடிசல் – பொங்கல். 

நெல் கரும்புக்கு இணையாக பொங்கலின் போது முக்கியத்துவம் பெறுவது மஞ்சள். பொங்கல் பானையில் மஞ்சள் பூசுதல், சிறிய மஞ்சள் துண்டை பானையைச் சுற்றி கட்டுதல், புத்தாடைகளுக்கு மஞ்சள் வைத்தல், மாட்டுப் பொங்கலின் போது அவற்றிற்கும் மஞ்சள் தேய்த்து குளித்து விடுதல், காணும் பொங்கல் நாளில் மஞ்சள் நீராட்டு திரு விழா என பொங்கல் முழுக்க மஞ்சள் வண்ணம் அடிக்க அது கிருமி நாசினி என்பதையும் பிரதான காரணமாக எடுத்துக் கொள்ளலாம். இப்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதன் அவசியத்தை உணர்த்த பொங்கல் திருநாள் ஆகச் சிறந்த வாய்ப்பு!

வையம் கொள்ளும் பொங்கல்!

உழைப்பின் பலனாகக் கிடைத்த உற்பத்தியால் மகிழ்ந்து இயற்கைக்கு நன்றி கடன் செலுத்தும் விழா உலகில் பல தேசங்களில் கொண்டாடப்படுகிறது. கொரியாவில் ‘சூசாக்’ விழா, ஆப்பிரிக்காவில் ‘யாம்’ விழா, ஜப்பானில் ‘ஒட்டோரி சாய்’ விழா, ஜெர்மனியில் ‘அக்டோபர் விழா’ என அறுவடைத் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது போல தமிழர்களின் அறுவடை விழா பொங்கல். அதில் ஒவ்வொரு நாடுகளில் ஒவ்வொரு விளைச்சலின் அறுவடைக்காகக் கொண்டாடுகிறார்கள். உதாரணமாக ஜெர்மனியில் அக்டோபர் விழா அவர்களின் முக்கியப் பயிரான திராட்சை விளைச்சலை மையமாக வைத்துக் கொண்டாடப்படுகிறது. 

பாரம்பரிய முற்போக்கான விழா!

பொங்கலை, சமூக நல்லிணக்க விழாவாகவும் கருதலாம். முதல் நாள் போகி, பழையவற்றையும் தேவையில்லாதவற்றையும் கழித்து வாழும், எளிமையான வாழ்க்கையைச் சுட்டுகிறது. இது இல்லறத் தூய்மையை வலியுறுத்துகிறது. அடுத்த நாள் பொங்கல் வைத்து அறுவடைக்கு வழி செய்த இயற்கையை வணங்கும், நன்றி மறவாத தன்மையை வலியுறுத்துகிறது. அதற்கடுத்த நாள், அறுவடைக்கு உறுதுணையாக இருந்த ஆடு மாடுகளுக்கு நன்றி பொருட்டாக அமைகிறது. அதற்கடுத்த நாள், சுற்றத்தோடு பிணைந்து தான் உலகம் நகர்கிறது, அந்தச் சுற்றத்தை நேரில் கண்டு அவர்களிடம் நட்பு பாராட்டும் விதமாக காணும் பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது. இப்படி உழைப்பையும் ஒற்றுமையையும் ஒரு கோட்டில் சேர்த்த முற்போக்கு விழாவாக பொங்கல் ஒளிர்கிறது. 

முற்போக்கின் அடிப்படையில், மற்றொரு சிறப்பாக பிறப்பு, இறப்புத் தீட்டுக்களால் பாதிக்கப்படாத திருவிழாவாக பொங்கல் அமைவதையும் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் சுட்டுகிறார். அது மட்டுமில்லாமல், சாதி சமயம் தாண்டி, அனைத்து மக்களும் உற்சாகிக்கும் ஒரு விழா பொங்கல்!

உழைப்போர் மகிழ பொங்கல்!

அக்காலத்தில் உழவு தான் பிரதான தொழில். அதனால் உழவர் திருநாளாக பொங்கல் சிறப்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது, உழவுக்குச் சமமாக பல தொழில்கள் தமிழகத்தில் வளர்ந்துவிட்டது. அதனால் உழவுக்கான விழா என்று பொங்கலை சுருக்காமல், உழைப்பிற்கான விழாவாகக் கொண்டாடுவோம். உழைக்கும் உங்களை நோக்கி, உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை, சுதந்திரா அக்ரோ-வாகிய நாங்கள் கொண்டு வருகிறோம். எங்களுடன் நீங்களும் சேர்ந்து பாடுங்கள்,

அச்சுவெல்லம், பச்சரிசி, வெட்டி வெச்ச செங்கரும்பு, அத்தனையும் தித்திக்கிற நாளுதான்.

Back to blog

Leave a comment

Please note, comments need to be approved before they are published.